Tuesday, July 26, 2011



 (கவிதை பற்றியகவிதைகள் )

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
*
நீ மொட்டைமாடியில் தூங்காதே .
விடிந்தும் போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!
*
குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!
*
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
*
எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்காதல் கவிதைகள்!



பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு
நம் நாட்டில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலை வர எத்தனை யுகங்கள் ஆகுமோ என்று நினைக்கும் போது பெரு மூச்சு உண்டாகின்றது. அரசாங்கமே வேட்டியும், சேலையும். அரிசியும் சோறும் கொடுத்து மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கி வரும் அதிசயம் வேறு நாடுகளில் இருக்க முடியாது. நாற்காலிகளை மறந்து நாட்டை நினைக்கின்ற காலம் வரவேண்டும் என்பதையே இஸ்ரேல் நமக்கு உணர்த்துகிறது. இல்லாதவர்களுக்கு உதவும் குணம் நம் தமிழருக்கு என்றும் உண்டு. பிச்சை எடுப்பவர்களைப் பார்த்து பரிதாபப்படும் அதே வேளையில் அயல் நாட்டினரைக் கண்டால் அவர்களை சூழ்ந்து கொண்டு இருப்பவர்களும் பிச்சை கேட்பது, நமது நாட்டை அவர்கள் குறைத்து மதிப்பிடுவதற்கு வழி செய்து விடுகிறது. வெளிநாட்டில் இந்தியாவை பற்றி எந்த ஒரு நிகழ்ச்சி காட்டப்பட்டாலும், இந்தியாவின் வறுமையும், இந்தியாவில் இருக்கும் பிச்சைக் காரர்களும் அதில் நிச்சயமாக இடம் பெறுவார்கள். அழுக்கு துணியும் பல நாட்களாக வெட்டப்படாத தலை முடியும் பல நாட்களாக சவரம் செய்யப்படாத முகமும் இவர்களின் அடையாளங்கள். போக்குவரத்து சிகனல்களில் கை குழந்தைகளுடன் வண்டிகளில் செல்பவர்களின் சட்டையையும் கைகளையும் இழுத்து காசு கேட்கும் தாய் மார்களை பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு காசு கொடுக்கும் நேரத்திற்குள் சிக்னல் பச்சை காட்டிவிட அவ்வப்போது சில விபத்துகளும் நிகழ்வதுண்டு.

இதனை எல்லாம் தடுத்து நிறுத்தும் திட்டம் ஒன்று கோவை மாநகரில் ஆரம்பிக்கப் பட உள்ளது. இந்த செய்தியினை தினமலர் நாளிதழில் படித்து ஆனந்தம். கோவை கலெக்டர் உமாநாத், காவல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி பிச்சைகாரர்களை கட்டுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. டான் பாஸ்கோ தொண்டு நிறுவனம் இவர்களில் பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர முன் வந்துள்ளது. அவர்களுக்கு மன நல மருத்துவர்கள் கொண்டு ஆலோசனையும், அவர்களுக்கு மறுவாழ்வும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் இரண்டு சுகாதாரப் பணியாளர்கள், இரண்டு போலீஸ் காவலர்கள் மற்றும் நான்கு டான் பாஸ்கோ பணியாளர்களைக் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டு டிசம்பர் 19 அன்று பிச்சைகாரர்களை பிடிக்கும் பணி தொடங்கப்பட்டது. கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு, டவுன் ஹால், உக்கடம், ரயில் நிலையம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள 320 பிச்சைகாரர்கள் பிடிக்கப்பட்டு வரதராஜபுரத்தில்  உள்ள மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு முடி வெட்டி சவரம் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டு சோப்பு ஷாம்பூ அளிக்கப்பட்டு குளிக்க செய்து புத்தாடைகள் அளிக்கப்பட்டது. சுட சுட உணவு அளிக்கப்பட்டு, மன நல கவுன்சல்லிங் அளிக்கப்பட்டது அதன்படி ஒவ்வொருவருக்கும் பிச்சை எடுக்காமல் உழைத்து வாழ வழி செய்யும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் பெயரளவில் மட்டும் அல்லாது , தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால் பிச்சைக்காரர்கள் இல்லாத நகராக கோவை மாநகரம் மாறக்கூடும். தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய ஹை டெக் நகராக உருவாகி வரும் கோவை, பிச்சைக் காரர்களும்  இல்லாத நகராக, உழைத்து வாழும் மக்கள் கொண்ட நகராக மாறினால், தமிழ் நாட்டின் மற்ற நகரங்களுக்கு ஒரு சிறந்த முன்னோடியாக மாறக்கூடும். மற்ற நகர்களின் கலெக்டர்களும் கோவை கலெக்டர் உமாநாத்தை போல திட்டம் தீட்டி பிச்சைக் காரர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுத்தால், பிச்சைகாரர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இந்தியாவிற்கே ஒரு முன்னோடியாக திகழ கூடும். அரசியல்வாதிகளும் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுக்கும் இந்த விஷயத்தில் உதவி, தமிழகம் தழைக்க வழி செய்தல் நலம்.

இதற்க்கு முயற்சி செய்த கோவை மாவட்ட கலெக்டர் திரு உமாநாததுக்கும், பிச்சைக்காரர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்ப்படுத்த உதவிடும் டான் பாஸ்கோ தொண்டு நிறுவனத்துக்கும் நன்றிகள் பல.